தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று மே 7-ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இதனை தி.மு.க விமர்சையாக கொண்டாடி வருகிறது. ஆனால், தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதன்படி, அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த கருத்தை முன்வைத்தன.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், “கூலிப்படை ஆதிக்கம் விரைவில் ஒழிக்கப்படும். மத மோதல்களை ஏற்படுத்துவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன” என தமிழக சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.
அதேபோல, அ.தி.மு.க ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12,74,036 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், தி.மு.க. ஆட்சியில் 8,66,653 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பதாகப் பேசினார். ஆனால், 2021-ம் ஆண்டு 442 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட (404) கூடுதலாகும்.
அதேபோல, 2020-ல் கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் கொடுமை அனுபவித்த பெண்கள் பிரிவில் 689-ஆக இருந்த குற்றச் சம்பவங்கள் 2021-ல் 875 ஆக அதிகரித்திருக்கின்றன. பாலியல் தொல்லை 892-ல் இருந்து 1077 ஆகவும், போக்சோ குற்றச் சம்பவங்கள் 4,496 ஆகவும் அதிகரித்திருக்கின்றன.
தமிழக அரசின் 2022-23 ஆண்டுக்கான கொள்கை விளக்கில், 2021-ம் ஆண்டுக்கான தரவுகல் அனைத்தும் தற்காலிக எண்ணிக்கை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்துப் பதிவான தகவல்கள் முழுமையாக இல்லை. அதேபோல கொலை, கொள்ளை, வன்குற்ற நிகழ்வுகள் 2020-ம் ஆண்டை விட, 2021-ம் ஆண்டில் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியைவிட குறைவாக இருந்த சம்பவங்களை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்திருக்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், பல பிரிவுகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன்படி, 2021-ல் அதிகரித்த குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, அது உத்தேச எண்ணிக்கை என்று தமிழ்நாடு காவல்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் துறை அமைச்சரான முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
2021-ம் ஆண்டை பொறுத்தவரை இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளின்படி, 89 ஆதாயக் கொலைகளும், 111 கூட்டுக் கொலைகளும், 2,550 வழிப்பறி சம்பவங்களும்,14,274 திருட்டுகளும் நடைபெற்றிருக்கின்றன. அதேபோல, பல்வேறு காரணங்களுக்காக 1,597 கொலைகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. 168 ஆள் கடத்தல்கள், 3,361 மோசடிகள், 61 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் 2020-ம் ஆண்டைவிட அதிகமாகும். குறிப்பாக 2021-ல் வன் குற்ற நிகழ்வுகள் 28,884 பதிவாகியிருக்கின்றன. இதில் வெறும் 10,380 வழக்குகளுக்கு மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல, குடும்ப தகராறில் 379 (2020-ல் 357) கொலைகள் சாதி பாகுபாடால் 9 கொலைகள் (2020-ல்4), குடிபோதையில் 109 கொலைகளும் எனக் கொலை சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இதில் பெரும்பாலும் 2021-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு நடைபெற்றுள்ளதாக தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பல்வேறு ஊடகங்களில் கூறி சமாளித்து வந்தாலும், உண்மை நிலையை அரசு பொதுவெளியில் அறிவிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.