துப்பறிவாளன் படம் பாணியில் திமுக பிரமுகரை 8 துண்டுகளாக வெட்டிய கொலையாளிகள், இதயம் நுரையீரல் மற்றும் குடல் பாகங்களை காசிமேட்டு கடலில் வீசியதாக தெரிவித்து உள்ளனர். டம்மி போட்டு தலையை தேடும் போலீசின் புது டெக்னிக் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலி தமீம்பானு, அவளது சகோதரர் வாஷிம் பாஷா, கூட்டாளியான ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையாளிகள் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரை மிரள வைத்துள்ளது.
தமீம் பானுவுக்கு 22 வயதாகும் நிலையில் 60 வயதான சக்கரபாணி பைனான்ஸ் கொடுத்து தமீம்பானுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
சக்கரபாணியுடனான தொடர்பை தவிர்ப்பதற்காக ஏரியாவிட்டு ஏரியா மாறிய நிலையிலும், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். புதிதாக குடியேறிய இடத்தில் கீழ் வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனர் டில்லிபாபுவுடன், தமீம் பானுவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வீட்டில் தமீம் பானு, தனது சகோதரர் வாசிம் உடன் சேர்ந்து பாத்தியா ஓதி மாந்த்ரீக வேலைகளை செய்து வந்துள்ளார்.
கொலை நடந்த அன்று இரவு வீட்டிற்கு வந்த கணவர் அஸ்லாம் உஜைனியிடமும் தனது இரு பெண் குழந்தைகளிடமும், பூட்டிய அறையில் இருந்த சக்கரபாணியின் சடலத்தை காண்பித்து அங்கிள் உடல் நலக்குறைவால் தூங்குகிறார். அவருக்கு ஓதி உள்ளதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி அந்த அறையை பூட்டி வைத்ததாக தமிம் பானு கூறியுள்ளார்.
இதனையடுத்து மறு நாள் கடைக்கு சென்று பெரிய அளவிலான கசாப்பு கடை கத்திகள் இரண்டை வாங்கி வந்த வாசீம்பாஷா வீட்டை பூட்டி விட்டு குளியல் அறையில் வைத்து இருந்த, சக்கரபாணியின் சடலத்தில் இருந்து கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளான்.
பின்னர் உடலை இரண்டு துண்டாகவும் கால் பாதங்களை தனியாகவும் என மொத்தம் 8 துண்டுகளாக வெட்டி வைத்து அவற்றை தனி தனி பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்திருந்துள்ளான்.
இந்த கொலை விவகாரம் குறித்து தமீம் பானுவின் புது காதலன் ஆட்டோ ஒட்டுனர் டில்லி பாபுவிடம் தெரிவித்து உதவி கேட்டுள்ளான். தமீம் மீது உள்ள காதலால் உதவி செய்ய முன் வந்த டில்லி பாபு, கடந்த 10 தேதி இரவு வாசீம்பாஷாவை தனது ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளான். அப்போது சக்ரபாணியின் தலையை போர்வையில் சுற்றி அடையார் ஆற்றில் வீசி உள்ளனர்
பின்னர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம் நுரையீரல் குடல் பகுதியை கவரில் அடைத்து வைத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கல்லில்கட்டி கடலில் தூக்கி வீசியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கொலைக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கத்தி மற்றும் ஒரு கத்திரி கோலை போலீசார் பறிமுதல் செய்து கைதான தமீம் பானு, வாசிம் பாஷா , டில்லி பாபு ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சக்ரபாணியின் தலையை மூன்றாவது நாளாக தீ அணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடியும் கிடைக்காத நிலையில் , 10 கிலோ எடையுள்ள மனித தலை போன்ற டம்மி ஒன்றை தயார் செய்து , கொலையாளிகள் வீசிய ஆற்றுக்குள் கயிறு கட்டி வீசி அது எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதை வைத்து , சக்கரபாணியின் தலையை தேடி கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.