தருமபுரி மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம், அங்குள்ள டி.என்.சி விஜய் மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் தருமபுரிதான். எப்படியாவது, இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரு சபதத்தை நானாகவே எடுத்திருக்கின்றேன். மேற்கில் காவிரி, வடக்கில் தென்பெண்ணை என 2 பெரிய ஆறுகள் ஓடிகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. இப்போது, ‘திராவிட மாடல்’ என்று ஒரு புதிய கொள்கை திடீரென வந்திருக்கிறது.
10 வயது, 11 வயது, 12 வயது பெண் பிள்ளைகள் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு கையில் மதுபாட்டில்களை வைத்துகொண்டு குடிப்பதுதான் திராவிட மாடலாக தெரிகிறது. எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள். ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியைக் காட்டுகிறோம். பாட்டாளி மாடல் என்பது தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் இருக்காது. அனைத்து மது கடைகளையும் மூடிவிடுவோம். தரமான இலவச கல்வியை கொடுப்போம். விவசாயிகளே விளைச்சலுக்கு விலை நிர்ணயம் செய்வதுதான் பாட்டாளி மாடல். உண்மையான வளர்ச்சி மாடலை என்னால் கொடுக்க முடியும். திராவிட மாடலுக்கும், பாட்டாளி மாடலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ தொகுதிகள் இருக்கின்றன. இப்போது, இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கொடுத்துவீட்டீர்கள். இன்னும் இருக்கிற மூன்று தொகுதிகளும் வேண்டும். என் தம்பிகள் நினைத்தால் யாரும் தடுக்க முடியாது. அதிலும், தருமபுரி மாவட்ட தம்பிகளிடம் யாருமே நெருங்க முடியாது. ஸ்பெஷல் தம்பிகள் தருமபுரி தம்பிகள். எனக்கு கிடைத்த தம்பிகளைப்போல தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே வேறு எந்த தலைவர்களுக்கும் கிடைக்கவில்லை. மக்களின் மனநிலை மாறிவிட்டது. ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
2016-ல் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’யை பார்த்தீர்கள். இப்போது, ‘பி.எம்.கே 2.0’ பார்க்கப் போகிறீர்கள். பல திட்டங்கள், பல மாற்றங்களுடன் வித்தியாசமாக செய்யப் போகிறேன். மக்கள் மனதில் அன்புமணி, மாம்பழம், பாட்டாளி மக்கள் கட்சி என்ற எண்ணம் இருக்கிறது. அதனை வாக்குகளாக மாற்ற வேண்டும். 2026 தேர்தலில், தி.மு.க, அ.தி.மு.க எவ்வளவுப் பணம் கொடுத்தாலும் எடுபோட போவதில்லை. நான் சொல்வதை, இன்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இன்னும் 6 மாதங்கள், 10 மாதங்கள்… இல்லையெனில், இந்த ஓராண்டில் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி பறக்க வேண்டும். இது அவர்கள் கிராம். இது, இவர்கள் கிராமம் என்று விளக்க வேண்டாம். பாகுபாடின்றி அனைத்து கிராமங்களுக்கும் செல்லுங்கள்’’ என்றார் அன்புமணி.