திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக மாணிக் சாஹாவை தேர்வு செய்தனர். புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாஹாவிற்கு முன்னாள் முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் வாழ்த்து தெரிவித்தார்.
திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா அகர்தலா நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில், திரிபுரா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திரிபுராவின் முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹா அவர்களுக்கு வாழ்த்துகள். பயனுள்ள பதவிக்காலம் அமைய அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ல் தொடங்கிய திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் மேலும் வீரியம் சேர்ப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு