அகர்தலா: திரிபுரா பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மாணிக் சஹா புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி தற்போது அவர் முதல்வர் பதவியிலும் அமர்ந்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லவ் குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் இணைந்தனர். இதையடுத்து பாஜக மேலிட உத்தரவின் பேரில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அகர்தலாவில் உள்ள ராஜ்பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாஜக திரிபுரா மாநில தலைவரான மாணிக் சஹா தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவுள்ளார்.
67 வயதான பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் திரிபுராவின் ஒரே மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக சார்பில் தேர்வானவர்.
திரிபுரா மருத்துவக் கல்லூரி மற்றும் அகர்தலாவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் நினைவு போதனா மருத்துவமனையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் சஹா, 2016ல் பாஜகவில் சேர்ந்தார். திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
மாணிக் சஹா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். கடந்த 2020-ம் ஆண்டில் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சியில் அவர் இணைந்த ஆரம்ப நாட்களில், 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பூத் நிர்வாகக் குழுவில் நகர்ப்புறப் பகுதிகளின் பொறுப்பாளராக இருந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் நிர்வாகக் குழுவின் பொறுப்பாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி பாஜகவின் 2018-ம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராகவும் வெற்றிகரமாக பணியாற்றியவர் ஆவார்.