திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியுள்ள இருவர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரியில் இன்று அதிகாலை நேரத்தில் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துள்ளானது. பாறைகள் உருண்டதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரம் என்பதாலும் சுமார் 300 அடிக்கு மேலான பள்ளம் என்பதாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கல்குவாரியைச் சார்ந்த சங்கரன் என்பவரிடம் முன்னீர்பள்ளம் பேலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் உள்ள தருவை கிராமத்தில், இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஒரு விபத்து நடந்துள்ளது. இதுவொரு தனியாருக்குச் சொந்தமான குவாரியில் நடந்துள்ள விபத்து. நிலச்சரிவுதான் விபத்துக்கான முக்கிய காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உதவியுடன் இதுவரை 2 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 4 நபர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையிலே இந்திய கப்பற்படை உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் உதவியும் கோரப்பட்டது. அரக்கோணத்திலிருந்து 30 பேர் கொண்ட குழு வந்துகொண்டிருக்கிறது. விரைவில் 4 பேரை மீட்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவாரியில் கற்கள் தொடர்ந்து விழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது, மாவட்ட நிர்வாகத்தின் முதல்பணி நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதுதான். குவாரி உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்த வரை கடந்த 7 மாதத்திற்குள் 6 கனமவளக் குவாரிகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குவாரிகளைக்கூட மூடியிருக்கிறோம். 2018-லிருந்து இது இயங்கிவரும் குவாரி, 2023-ம் ஆண்டு வரை லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விதிமீறல் கண்டறியப்படாடல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.