திருப்பதி
திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குறைவான அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.
திருப்பதி லட்டு பிரசாதம்
உலகப் புகழ் பெற்றது. இந்த நிலையில், திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்யப்பட்ட லட்டு பிரசாதம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியான ‘டயல் யுவர் ஈ.ஓ’ (Dail your EO) எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொலைபேசி மூலம் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த 3 நாட்களும் கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.” என்றார்.
வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு போன்ற வசதிகளை தேவஸ்தானம் செய்து வருவதாக தெரிவித்த அவர், “பக்தர்கள் உண்டியல் மூலம் ஏப்ரலில் ரூ.127 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் ரூ.4.41 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 99.07 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 9.91 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோடை வெயிலுக்கு மாட வீதிகளில் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.3.60 கோடி செலவிட்டு ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் சீரமைக்கப்பட்டது. அலிபிரியில் ரூ.300 கோடியில் சிறுவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. திருமலையில் தியான மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது. ரூ.18 கோடியில் உண்டியல் பணம் எண்ணும் ‘பரகாமணி’ அரங்கு விரைவில் கட்டப்படும்.” என்றும் தெரிவித்தார்.