புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த அபிஷேகப்பாக்கம் சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மன் கோயிலில் தேரோட்டம் இன்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பாகக் கருதப்படுவது நரசிம்மர் அவதாரம். அவதார தினம் நரசிம்மர் ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைணவ தலங்களில் எழுந்தருளியுள்ள நரசிம்மருக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். புதுவையை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைவையொட்டி நாள்தோறும் காலையில் சுவாமி பல்லக்கு புறப்பாடும், மாலையில் வீதி உலாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 15) நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு தேர் இழுத்தனர். இன்று நரசிம்ம ஜெயந்தியால் நரசிம்மரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நாளை காலை மட்டையடி உற்சவமம், இரவில் இந்திர விமானத்தில் வீதியுலா, நாளை மறுநாள் புஷ்பயாகம், 18ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
நரசிம்மர் ஜெயந்தியொட்டி திருமஞ்சனம்- பக்தர்களுக்கு தரிசனம் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பார்கவ, யோகானந்த, சத்ரவட, ஜுவால, அகோபில உள்ளிட்ட 9 நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பால் தயிர் சந்தனம் இளநீர் தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் ஒன்பது கிரகங்களுக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பின்னர் நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.