பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் கூட்டம் நேற்று கூடியது.மேலிட பொறுப்பாளர் அருண்சிங், துணை பொறுப்பாளர் அருணா, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மாநில துணை தலைவர் நிர்மல் குமார் சுரானா உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.எம்.எல்.ஏ.,க்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஏழு எம்.எல்.சி., பதவிகளுக்கும்; ஆசிரியர், பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு எம்.எல்.சி., பதவிகளுக்கும்; நான்கு ராஜ்யசபா பதவிகளுக்கும் தேர்தல் நடப்பதால், வேட்பாளர்கள் தேர்வு குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.எம்.எல்.ஏ.,க்களால் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.சி., பதவிகளில், பா.ஜ.,வுக்கு நான்கு இடங்கள் கிடைக்கவுள்ளது.இதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இளைய மகனும், மாநில துணை தலைவருமான விஜயேந்திரா, துணைத்தலைவர்கள் நிர்மல் சுரானா, ராஜேந்திரா, பொது செயலர் மகேஷ் டெங்கினகாய், எஸ்.சி., மோர்ச்சா மாநில தலைவர் சலவாதி நாராயணசாமி, துணைத்தலைவி தேஜஸ்வினி அனந்தகுமார், நடிகை மாளவிகா ஆகியோர் அடங்கிய உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்களாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமமூர்த்தி, தொழிலதிபர்கள் லஹரி மோகன், விஜய சங்கேஸ்வர், பிரகாஷ் ஷெட்டி, லேஹர்சிங் ஆகியோர் அடங்கிய உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கைப்படி இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் மட்டுமே பா.ஜ.,வுக்கு கிடைக்கும். மூன்றாம் பதவிக்கு, ம.ஜ.த.,வின் ஆதரவு தேவை.உத்தேச பட்டியல் பா.ஜ.,வின் மத்திய பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்குழு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படும்.விஜயேந்திராவை எம்.எல்.சி., ஆக்கி, அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக அடுத்த சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என்பது பா.ஜ., மேலிடத்தின் கணக்கு.
நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் தேர்வாகிறார்; பா.ஜ., – எம்.எல்.சி., ஆகும் எடியூரப்பா மகன்?
மல்லேஸ்வரம் : பெங்களூரில் நேற்று நடந்த பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில், எம்.எல்.சி., ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாரித்து மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எம்.எல்.சி., பதவிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.