நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் பெண் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, திருப்பூரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சங்கம், டீமா சங்கம், நிட்மா சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் நாளை (மே 16) மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இந்த போராட்டத்துக்கு பல் வேறு தொழில் அமைப்பினரும் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ரோபா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம், நிட்மா சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி, டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம், சைமா சங்க பொதுச்செயலாளர் எம்பரெர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி முழக்கமிட்டனர். இதில் பெண் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.