நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிருடன் சிக்கிக் கொண்டனர். அவர்களில் முருகன், விஜய் ஆகிய இருவர் மீட்கப்பட்டுவிட்டனர்.
செல்வம் என்ற டிரைவரின் முகம் வெளியில் தெரிந்த போதிலும் அவரது உடல் முழுவதும் பாறை மற்றும் கிட்டாச்சி இயந்திரத்துக்குள் சிக்கியிருப்பதால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு லாரிகள் பாறைக்குள் புதையுண்டு கிடப்பதால் லாரி டிரைவர்கள் ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் கிளீனர் முருகன் ஆகியோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
விபத்து நடந்த குவாரியில் நடக்கும் மீட்புப்பணிகளை அ.தி.மு.க சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், ராதாபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை, நெல்லை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கனேசராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை, “கல்குவாரி உரிமயாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சட்டத்துக்குப் புறம்பாக இதுபோல தவறு செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அதைக் கண்காணித்துத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதனால் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரியை கண்காணிக்க வேண்டிய கனிமவளத்துறை அதிகாரிகள் எங்கே? இந்த குவாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த கல்குவாரிக்கு கால நீட்டிப்பு கொடுத்தது எப்போது? இதையெல்லாம் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. விபத்து நடந்து 14 மணி நேரமாகியும் இதுவரை இருவர் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை, மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையம், விஜயநாராயணம் கடற்படை தளம் என முக்கியமான இடங்களில் இது போல விபத்து ஏதாவது ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை குழு இப்படித்தான் கால தாமதமாக வருவார்களா? இது இந்த மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை ஒரு அமைச்சர் கூட இந்தப் பகுதியை வந்து பார்க்கவில்லை. முதல்வர் இங்கு உடனே வர வேண்டும். அவர் வந்தால்தான் மீட்புப் பணிகள் வேகமாக நடக்கும்.
நெல்லை மாவட்டத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க இங்குள்ள அனைத்துக் குவாரிகளையும் மூட வேண்டும். குவாரிகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறது என்பதை நீதிபதி தலைமையிலான குழு அமைத்து உறுதி செய்த பின்னர் குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். எதற்கெல்லாமோ குழு அமைக்கும் இந்த அரசு இதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும்.
காரணம், கூடங்குளத்தில் அனுமதி பெறாத இடத்திலேயே ஒரு கல்குவாரி செயல்படு்கிறது. அது பற்றி மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தார்கள். அது குறித்து நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால் அனைத்து குவாரிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். விபத்தில் சிக்கியவர்களை மீட்க, பேரிடர் மீட்புக் குழுவினரை விரைவாக வான்வெளியில் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.