புதுடெல்லி:
புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை (16ந்தேதி) நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேச உள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
நேபாளத்துடனான நமது நட்புறவு இணையற்றது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நாகரீகம் மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகியவை நெருங்கிய நட்புறவின் நீடித்த அம்சமாக அமைகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறேன்.
கடந்த மாதம் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் இந்தியப் பயணத்தின்போது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் மீண்டும் அவரை சந்திப்பதை எதிர்நோக்கி உள்ளேன். இந்த சந்திப்பின்போது பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.