பஸ்சிற்கு பணம் இல்லாததால் 65 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி- நடுரோட்டில் பிரசவம் ஆன பரிதாபம்

திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி ஒய்.எஸ்.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி. அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் வர்ஷினிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் திருப்பதி அருகே உள்ள ஜீவக்கோணா பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர்.
வர்ஷினியின் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான வர்ஷினிடம் நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து கணவரிடம் பஸ் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
அவரது கணவர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த வர்ஷினி தனது தாய் வீட்டிற்கு நடந்து செல்ல முடிவு செய்து ரேணிகுண்டா, காளஹஸ்தி வழியாக நாயுடு பேட்டை பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். சுமார் 65 கி.மீட்டர் தூரம் அவர் நடந்து வந்தார்.
அப்போது வர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்துமாறு சைகை செய்தார். யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் வர்ஷினிக்கு கடுமையான பிரசவ வலியால் அலறி துடித்தார். அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றார்களே தவிர யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு சிறிது நேரம் தாமதம் ஆனது.
அதற்குள் தர்ஷினியின் வயிற்றிலிருந்து பாதி குழந்தை வெளியே வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் கிரண்குமார், சிரஞ்சீவி ஆகியோர் வர்ஷினி யை மீட்டு ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து வர்ஷினியை சிகிச்சைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வர்ஷினியும் அவரது குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.