பாஜக-வில் இணைந்தால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, “தற்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளியை அரசு தேடி கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல, அமைச்சராகவும் மாற்றிவிடுவார்கள்” என்றும் விமர்சித்தார். மேலும் பேசுகையில், “சிலிண்டர் விலை விண்ணை முட்டும் வகையில் இருந்தால், பிரதமர் மோடி கொடுத்த ரேசன் பொருட்களை எப்படி சமைத்து சாப்பிட முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார். “பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டது” என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் தாவூத் கூட்டாளிகளுக்கு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியது தேசிய பாதுகாப்பு முகமை. இதற்காக நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் பலருக்கு சொந்தமான இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனை நடத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்திலே பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த சோதனைகள் கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உள்ளிட்ட பலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குவிந்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM