கொச்சி: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) ஆகியவை தீவிரவாத அமைப்புகள்தான். ஆனால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஆர்எஸ்எஸ் தொண்டர் ஏ.சஞ்சித் (27) கொல்லப்பட்டார். இது தொடர்பாக பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி, சஞ்ஜித் மனைவி அர்ஷிகா சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ஹரிபால் கடந்த 5-ம் தேதி தள்ளுபடி செய்தார். ஆனால், இது தொடர்பான விரிவான உத்தரவு நேற்று முன்தினம்தான் வெளியானது.
அந்த உத்தரவில், “பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ ஆகிய தீவிரவாத அமைப்புகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவை தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல” என கூறப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ மாநில தலைவர்கள், இந்தக் கருத்தை தீர்ப்பிலிருந்து நீக்கக் கோரி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம், பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை தீவிரவாத அமைப்புகள்தான் என நீதிமன்றம் கூறியிருப்பதை சங்பரிவார் அமைப்புகள் வரவேற்றுள்ளன.