சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக மே 26 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வரும் பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து இலங்கை விவகாரம், தமிழ்நாட்டு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளார்.
கடந்த 2014 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்து தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, மூன்றாவது ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது அதற்கான நிகழ்ச்சிகளுக்காக நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனொரு பகுதியாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, தெற்கு ரயில்வே சார்பாக 450 கோடி ரூபாய் செலவில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மதுரை – தேனி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தையும் திறந்து வைக்க உள்ளார். அதேபோல பாண்டியன் விரைவு ரயில் மதுரையில் இருந்து தேனி வரை நீடிப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிகிறது. போலவே சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மற்றும் சென்னை பெங்களூரு அதிவிரைவு சாலை ஆகிய சாலைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக பிரதமர் சென்னை வருகிறார் என்பதால் அதுசார்ந்த எதிர்பார்ப்புகளும் உயர்ந்துள்ளது. அப்படி அவர் வருகையில், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை சந்தித்து இலங்கை விவகாரம், தமிழ்நாட்டு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM