முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பின்பு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பழ.நெடுமாறன் இலங்கையில் இருந்திருந்தால் மகாத்மாவாகப் புகழப்பட்டிருப்பார். பா.ஜ.க வேண்டாத கட்சியாக, கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு காலசக்கரத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி கிடைத்தால் 2008-ம் ஆண்டு மோடியைப் பிரதமராக மாற்றிருப்பேன்.
ஏனென்றால், மோடி பிரதமராக இருந்திருந்தால் முள்ளி வாய்க்கால் போன்ற இலங்கை சம்பவம் நிகழ்ந்திருக்காது. இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதற்கு நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் கிடையாது” எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன், “சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை வெற்றி பெற வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள். தற்போது அதே சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி அவரை ஆட்சியிலிருந்து வெளியேற்றிப் போராடி வருகின்றனர். ராஜபக்சேக்கள் சொந்த நாட்டிலேயே ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை பிரச்னை தற்போது சர்வதேச பிரச்னையாக உருவாகியுள்ளது. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவிற்கு ஆபத்து. அண்ணாமலை இது தொடர்பாகத் தெளிவாகவும் ஆழமாகவும், எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிப் பேசியுள்ளார். இது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அண்ணாமலை இருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக இருக்கிறார்” எனப் பேசினார்.