புதுச்சேரி: ரங்கசாமி பதவியேற்று ஓராண்டாகியும் மத்திய அரசு நிதி தரவில்லை, புதுச்சேரி மக்களுக்கு பொய்யான வாக்குறுதி தந்து பாஜக ஏமாற்றி விட்டது என்று ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. புதிய அலுவலகத்தை தமிழக ஆம்ஆத்மி தலைவர் வசீகரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ரவி சீனிவாசன், செயலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வசீகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு புதுச்சேரிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என பொய்யான வாக்குறுதிகளைத் தந்து என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. முதல்வராக ரங்கசாமி பதவியேற்று ஓராண்டாகியும் எந்த ஒரு புதிய நிதியையும் புதுச்சேரிக்கு தரவில்லை. இதனால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாத திராணியற்ற அரசாக மாறியுள்ளது. நிதி விஷயத்தில்
எதையும் செய்யாமல் கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்தி பதவி சண்டையிட்டு மக்களை பாஜக ஏமாற்றியுள்ளது.
மத்தியில் இருந்து புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர்கள் வரும்போது நகர் முழுக்க பேனர் வைக்கும் கலாச்சாரத்தை மாற்றுவோம் என்ற வாக்குறுதியையாவது பாஜக நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பை செய்து 80 சதவீதத்துக்கும் மேல் வடநாட்டவரை பணிக்கு வைத்து புதுச்சேரி மக்களை படுகுழியில் தள்ளும் போக்கை பாஜக மாற்ற வேண்டும். கொடுத்த வாக்குறுதியில்
முக்கியமாக புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாவிட்டால் ஆம்ஆத்மி களமிறங்கி மக்களுக்காக போராடும்” என்று குறிப்பிட்டார். புதிய அலுவலகத் திறப்பின்போது என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.