புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட பூ, காய்கறிகள் ஆகியவற்றை அறுவடை செய்யும் இன்று நடைபெற்றது.
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. அதோடு ஒவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
சிறைசாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.
இவையின்றி உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றை முறையாக கைதிகளே பராமரிக்கின்றனர். இந்நிலையில் கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள், காய்கறிகள் நன்கு விளைந்துள்ளன. இதனை அறுவடை செய்யும் நிகழ்ச்சி சிறையில் நடைபெற்றது.
சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், சிறைத்துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர், தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிச்செல்வன் ஆகியோர் அறுவடையை தொடங்கி வைத்தனர். கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரை, முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது. கத்திரி-60, வெண்டை-20, முள்ளைங்கி-30, மாங்காய், பலா-200, சாமந்தி-40, பச்சை பட்டாணி-10 கிலோ நேற்று ஒரு நாளில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து சிறை கைதிகள் கூயிதாவது: ”ஒரு விதை செடியாக மலரும் போதும் மிக மகிழ்ச்சி அடைகிறோம். விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து விட்டோம். விவசாயம் செய்வதால் நிம்மதியாக தூங்குகிறோம். விவசாயத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 200 ஊதியமும் பெறுகிறோம். தண்டனைக் காலம் முடிந்தும் பலரும் சிறையில் இருக்கிறோம். அரசு கருணையோடு விடுதலை செய்தால் இயற்கை விவசாயம் செய்வோம்.” என்று குறிப்பிட்டனர்.
”கைதிகள் பயிரிட்டு பராமரிக்கும் பூக்கள், காய்கறிகள் நல்ல முறையில் விளைந்துள்ளன. இவை கடந்த சில நாட்களாக தினமும் அறுவடை செய்யப்படுகிறது. கைதிகள் பெறும் ஊதியத்தில் மூன்றில், இரண்டு பங்கு பணம் அவர்கள் சிறையில் இருக்கும்போதே கையில் வழங்கப்படுகிறது. இதனை அவர்கள் தங்களை காண வரும் உறவினர்களிடம் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு மனநிறைவை இது தருகிறது.” என அதிகாரிகள் தெரிவித்தனர்.