புதுடெல்லி:
புத்தர் ஜெயந்தி தினம் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை (16ந்தேதி) நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேசுகிறார்.
பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி இந்திய நேபாள எல்லையில் உத்தரபிரதேச மாநில போலீசாரும் சசஸ்திர சீமாபல் படைப்பிரிவினரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். சசஸ்திர சீமாபல் சாவடிகளிலும், நேபாளம் செல்லும் முக்கிய வழித்தடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியநேபாள எல்லையில் அமைந்துள்ள சோனவுலி, துடிபாரி ஆகிய சோதனை சாவடிகளிலும், மற்ற சோதனை சாவடிகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகளும், ஸ்கேனர் கருவிகளும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மகராஜ் கஞ்ச், சித்தார்த்தா நகர், பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் சசஸ்திர சீமாபல் படை பிரிவினரும், போலீசாரும் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். எல்லைப்பகுதியையொட்டி அமைந்துள்ள மத வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு உளவுப்பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.