சென்னை பெரும்பாக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரூ.116.37 கோடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் இறுதிக்கட்டப் பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பெரும்பாக்கத்தில் 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகளை, ரூ.116.37 கோடி மதிப்பில், சர்வதேச வீட்டுவசதி தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கட்டுவதற்காக, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது.
இதேபோல, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களும் திட்ட அறிக்கையை அனுப்பிவைத்தன. அதில், தமிழக அரசின் திட்டத்துக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.116.37 கோடியில், ஒரு குடியிருப்புக்கு ரூ.1.50 லட்சம் என்ற அடிப்படையில் மத்திய அரசு ரூ.17.28 கோடியுடன், தொழில்நுட்ப புதுமை மானியமாக ரூ.46.08 கோடியை கூடுதலாக வழங்குகிறது. மாநில அரசின் பங்கு ரூ.35.62 கோடி. இதையடுத்து, கான்கிரீட் கட்டுமானத் தொழில்நுட்ப முறையைக் கடைப்பிடித்து இந்தக்குடியிருப்புகளை கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஆண்டுஜனவரி 1-ம் தேதி பிரதமரால் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தரை மற்றும்5 தளமாக, ஒவ்வொரு தொகுப்பிலும் 96 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட 12 கட்டிடத் தொகுப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகள் முடிவுற்று, திட்டப் பகுதிகளில் உள்சாலைகள், மின்விளக்குகள், மின்சார இணைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி, சிறு கடைகள், ரேஷன் கடை, நூலகம், பாலகம், திடக்கழிவு மேலாண்மை போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திட்டப் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடிவுற்று, குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்துக்காக தனியாக ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் அனைத்தும் வரும் 16-ம் தேதி முடிவுறும் நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்இயக்குநர் ம.கோவிந்தராவ் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.