சென்னை சைதாப்பேட்டை பகுதியில் காவலர் ஒருவர் தனிநபர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்த நிலையில், காவலர் தாக்கியகாகக் கூறப்படும் நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தாக்கப்பட்ட அந்த நபர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வரும் பாலச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
போக்குவரத்து ஊழியராக பணியாற்றும் பாலச்சந்திரன் இன்று காலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சர்ச்சுக்கு வந்துள்ளார். அதன்பின்பு, அங்கிருந்த கடையில் நின்று ஜூஸ் குடிக்கும்போது, அங்கே சாலையில் கீழே எச்சில் துப்பியிருக்கிறார். அப்போது, அந்த வழியாகச் சென்ற காவலர் லூயிஸ் மேல் எச்சில் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த காவலர் போக்குவரத்து ஊழியரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
காவலர் தாக்கியதில், போக்குவரத்து ஊழியரின் முகம் கிழிந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. இருந்தபோதிலும், அந்த காவலர் அவரை காலால் உதைத்து கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் தாக்கிய காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். தாக்குதலில் காயமடைந்த நபருக்கு சைதாப்பேட்டை மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து ஊழியர் பாலச்சந்திரன் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு, போக்குவரத்து ஊழியரைத் தாக்கிய காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.