பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரையில் 20-க்கு மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவை இருந்தபோதிலும் இதுவரை அவர்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
வீடுகளுக்கு மின்சாரம், தெரு விளக்கு இல்லாததால் அடிக்கடி சூரியன் மறைந்த பின்னர் அவர்கள் இருட்டிலேயே வசிக்கும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்குள் விஷப் பாம்புகள், விஷப்பூச்சிகள் புகுந்து அடிக்கடி அச்சுறுத்தி வருகின்றன.
இப்பகுதியில் உள்ள மாணவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரியில் இருந்து வந்த பின்னர் இரவு நேரத்தில மின்சாரம் இல்லாததால் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மாலை 6 மணிக்கே அங்கு வசிக்கும் அனைவரும் வீட்டைப் பூட்டி வெளியில் எங்கும் செல்லாமல் முடங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக பல பேர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலை நீடித்து வருகிறது. மின்சாரம் இல்லாததால் எலக்ட்ரிக்கல் பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
செல்போனை சார்ஜ் செய்வதற்கு இங்கு வசிப்பவர்கள் அருகில் உள்ள ஏரி மேடு பகுதியில் உள்ள உறவினர் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும் இதுவரை வீட்டில் டி.வி. பார்த்தது இல்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சாந்தி கூறியதாவது: எங்களுடைய தாத்தா காலத்தில் இருந்தே இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இதுவரை மின்சாரத்தை எங்கள் பகுதியில் பார்த்ததில்லை. ஓட்டு கேட்பதற்கு அரசியல் கட்சியினர் வரும்போது அனைத்து வசதிகளும் செய்து தருவதாக கூறுகிறார்கள்.
பின்னர் கண்டு கொள்வதில்லை. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. வீட்டிற்கு மின்சாரம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, தெருவிளக்கு அமைத்தால் நாங்கள் தெரு விளக்கிலாவது படிப்போம்.
9ம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகா:
நாங்கள் பள்ளியில் படிப்பதோடு சரி. மின்சாரம் இல்லாததால் வீட்டில் வந்து வீட்டு பாடங்களை படிக்க முடிவதில்லை. பாம்பு, விஷபூச்சி தொல்லை அதிகம் காணப்படுகிறது. மின்வசதி இல்லாததால் படிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. இரவு முழுவதும் இருளில் தான் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.