சென்னை: மனிதனுக்காக மருத்துவமனைகள் இருப்பதுபோல், மண் வளத்தைப் பாதுகாக்க பிரத்யேக விவசாய மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு அமைப்பு (இப்கோ) சார்பில் ‘விவசாய ட்ரோன்களின் பயன்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கம் குரோம்பேட்டையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
உலகின் முதல் விஞ்ஞானி விவசாயிதான். விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே வேளாண் தொழிலை செய்து வருகின்றனர். எந்தவொரு விவசாயியும் தனது குழந்தைகள் வேளாண் தொழிலுக்கு வருவதை விரும்புவதில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டியது மிகவும் அவசியம். நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு திரும்பச் சேவையாற்றுவதற்கான காலம் கைகூடியுள்ளது. .
எனவே, ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் தொழிலை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொறியியல் முடித்து வெளியேறுபவர்களுக்கு அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் முறையாக கிடைப்பதில்லை. ஒரு அரசால் அனைவருக்குமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியாது. பட்டதாரிகளை முறையாக நெறிப்படுத்தி வழிகாட்டினால் ஏராளமான தொழில் முனைவோர்களை நம்மால் உருவாக்க முடியும்.
விவசாயம் முதல் ராணுவம் வரை ட்ரோன்கள் தேவைப்படுகின்றன. அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீட் தகுதித் தேர்வுக்காகப் போராடும் இளைஞர்கள் நமது மண் வளத்தை மீட்டெடுக்க ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். மனிதர்கள், விலங்குகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மருத்துவமனைகள் இருப்பதுபோல், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கவும் பிரத்யேக விவசாய மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
நம் நாட்டில் பெரும்பாலும் அரிசி, கோதுமையை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால், இவை அதிக நீர் தேவைப்படும் பயிர்களாகும். நம்மிடம் உள்ள வளங்களைப் பராமரித்து பயன்படுத்த வேண்டியது அவசியம். அதைக் கவனத்தில் கொண்டுபயிர் சாகுபடியில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் எம்ஐடி கல்லூரியின் வான்வெளி ஆய்வு மைய இயக்குநர் கே.செந்தில்குமார் பேசும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள 15 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளிலும் தலா ஒரு ட்ரோன் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது எங்களின் இலக்காகும். ஒரு ட்ரோன் இயக்குவதற்கு 3 பேர் தேவைப்படுவார்கள். அதன்படி 45 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ட்ரோன்கள் மூலம் விளை நிலங்களில் பூச்சிக் கொல்லிகள் தெளித்து, உரங்கள், விதைகளைத் தூவ முடியும். நிலம் அளவிடல், மண்ணின் தரம், பயிர் சேதங்களை மதிப்பிடலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 2 நிமிடத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கலாம். இதற்கு சற்று கூடுதல் முதலீடு தேவைப்பட்டாலும் பலன்கள் அதிகளவில் இருக்கும்.
சிறு, குறு விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ட்ரோன் பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் 2025-ம் ஆண்டுக்குள் டிராக்டர்களைப் போல் விவசாயிகளின் நண்பனாக ட்ரோன்கள் வலம்வரும். விவசாயப் பணிகளுக்கு ஒரு லட்சம் ட்ரோன்களை பயன்படுத்தவுள்ளதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. இந்த துறையின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், எம்ஐடி கல்லூரி வழங்கும் இலவச ட்ரோன் பயிற்சிக்கு 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
கருத்தரங்கில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் இயக்குநர் கே.எஸ்.சுப்ரமணியன், மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல் ஜி.ராஜசேகர், எம்ஐடி கல்லூரி முதல்வர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.