சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும்கிடைக்கும். திமுக, தனக்கான 4 இடங்களில் 3-ல் போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஓர் இடத்தை காங்கிரஸுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘வரும் ஜூன் 10-ம் தேதி நடக்கும் மாநிலங்களவை உறு்ப்பினர் தேர்தலில், திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸுக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுகிறது. 3 இடங்களுக்கு திமுக வேட்பாளராக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.
தற்போது எம்.பி.க்களாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆர்.வைத்திலிங்கம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதனால் காலியான இடத்தில் வெற்றி பெற்ற கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஓராண்டு மட்டுமே பதவியில் இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் 1996 முதல் திமுக உறுப்பினராக உள்ளார். வெண்ணந்தூர் ஒன்றியத்தில் கோரைக்காடு கிளைச் செயலாளர், ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய பிரதிநிதி, மாவட்டபிரதிநிதி உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த 2012-ம் ஆண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். 2020-ல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுகசெயலாளராக உள்ள 82 வயதானதஞ்சை சு.கல்யாண சுந்தரம், கும்பகோணம் ஒன்றிய செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழ்நாடு பெற்றோர் – ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் உள்ள இவர், தஞ்சைமாவட்டத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகும் 3-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வேட்பாளரான இரா.கிரிராஜன், கடந்த 2015 முதல் திமுக வழக்கறிஞர் அணி செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டலக் குழு தலைவராகவும் இருந்தார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுகிறார்.