சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் மக்களுக்கான இலவச வீடு கட்டும் திட்டத்தில் பணம் ஒதுக்காமல் லஞ்சம் கேட்டு தொல்லை தந்த, தமிழக அரசு அதிகாரியால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மணிகண்டன், மனைவியையும் மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது. ஊழல் மற்றும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்த அப்பாவி குடி மகனுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியும், மறைந்த மணிகண்டன் மனைவிக்கு தமிழக அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம்.
வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம் பஞ்சாயத்து யூனியனில் அதிக கமிஷன் கேட்டு தி.மு.க. கவுன்சிலர் கொடுத்த தொடர் அழுத்தத்தால் ஊராட்சிமன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் நடத்தும் சட்டத்துக்குப் புறம்பான லாட்டரி ஏஜென்சியால் பாதிக்கப்பட்ட நூல் வியாபாரி கிட்டத்தட்ட 62 லட்சம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட பகுதிகளை இலவச வீடு கட்டும் திட்டமாக மாற்றி கணக்கு காட்டி பணம் கையாடல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது போன்ற செய்திகளை என்னால் அடுக்கிக்கொண்டே போக முடியும் ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எந்தக் குறைவும் இல்லாமல் பணத்துக்காக காரியங்கள் பரிமாறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் உயிர் அநியாயமாகப் பறிபோகிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மயிலைப் பகுதியில் 25 ஆண்டுகளாக குடியிருந்த மக்கள் திடீரென்று வெளியேற்றப்படுகிறார்கள். இடிக்கப்பட்ட அந்த வீடுகளுக்கு அருகாமையில் புதிதாக உயர்ந்து நிற்கும் தனியார் கட்டிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மக்கள் அதிரடியாக காலி செய்யப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையன் என்பவர் தனக்குத்தானே தீ வைத்து மரணமடைந்தார்.
மாநில அரசின் இது போன்ற நிர்வாக திறமையற்ற நடவடிக்கைகளை எல்லாம் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் இதுபோன்ற தவறுகளை எல்லாம் மேலும் நடைபெறாமல் தடுத்து வலிமையான முன்னுதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்தும் அதனால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியும் மாநில அரசு பணியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.