IPBS said Tamil language is not mandatory to work in Tamilnadu Banks: தமிழ்நாட்டில் வங்கிகளில் பணிபுரிய தமிழ் மொழியில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக எளிய மக்களுடன் நேரடி தொடர்பு கொள்ளும் பொதுத்துறை வங்கிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் போன்றவற்றில் தமிழ் தெரியாத பிற மொழி பேசுபவர்கள் அதிகமாக பணிபுரிவதால், பொதுமக்கள் சேவைகளை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த சேவைகளை பெற விரும்பும் எளிய மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரிவதால், ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரியாமல் சேவைகளை பெறுவதில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும் ரயில்வே, வங்கிகள் போன்ற இடங்களில் தமிழக மக்கள் ஒன்று சொல்ல, பிற மொழி பேசுபவர்களால் அதனை புரிந்துக் கொள்ளமுடியாமல் சிக்கல் இருந்து வருகிறது.
சில இடங்களில் அருகில் இருக்கும் தமிழக அதிகாரிகள் உதவுவதால், பெரும்பாலான இடங்களில் இந்தப் பிரச்சனை பெரிதாக வெளியே தெரியவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நேரடியாக தொடர்பு கொள்வதில் மக்களுக்கு சிக்கல் இருந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமபுறங்கள் தான். இன்றைக்கு அனைத்து மக்களும் வங்கிகளுக்கு வந்து செல்லும் நிலையில், அங்கு பணிபுரியும் வட மாநிலத்தவர்களால், எளிய மக்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. வங்கிகளில் தமிழக அதிகாரிகள், தமிழில் படிவத்தை நிரப்பினாலே சேவை வழங்கும் நிலையில், தமிழ் தெரியாதவர்களால், மக்கள் ஆங்கிலத்தில் படிவங்களை நிரப்ப பிறரின் உதவியை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதேபோல ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் தமிழர்கள் ஒரு ஊரை குறிப்பிட்டு டிக்கெட் கேட்க, இந்தி பேசுபவர்களால் அந்த உச்சரிப்பை புரிந்துகொள்ள முடியாமல் வேறு இடத்துக்கு டிக்கெட் கொடுத்துவிடுகிறார்கள்.
தபால் நிலையங்களில் இதைவிட மோசமாக, ஒரு திட்டத்தை பற்றி கேட்டால், வடமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றொரு திட்டம் பற்றி கூறுகிறார்கள். பல்வேறு வகையான திட்டங்கள் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு, தங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க முடியாத இருந்து வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய தமிழர்களை நியமிக்க வேண்டும் என்றும், பிராந்திய அளவில் ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மாநில மொழிகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது இப்போது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக வங்கி பணிகளில் கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்து வந்தது.
அதேசமயத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மற்றும் பிற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று அறிவித்துள்ளன.
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பில் மாநில மொழிகள் முன்னுரிமை அடிப்படையிலானது என்று கடந்த 4 வருடங்களாக கூறி வருகிறது. இதனால் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட உள்ள 843 கிளார்க் பணியிடங்களில் 400-க்கும் மேற்பட்ட பணிகள் வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 50% பணியிடங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய பிற பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் சம்மேளனம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படியுங்கள்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து… புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர்!
அதில், பொதுத்துறை வங்கி பணிகளில் கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேசவேண்டும் என்பது முன்னர் கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்புகள் இருந்தது. எனவே வங்கி தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்த விதியை மீண்டும் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் தமிழர்கள் சேவைகளை எளிதாக பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் ஓரளவு தெரிந்த வட மாநிலத்தவர்களிடம் சேவைகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற நிலையில், தமிழ் கொஞ்சம் கூட தெரியாமல் பணிக்கு வரும் வட மாநிலத்தவர்களால், தமிழக மக்கள் மேலும் சிரமப்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.