கடந்த 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற 707 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
இதேவேளை கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் நிட்டம்புவவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் நால்வர் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் நகரத்தில் அமைந்துள்ள நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களதும், நகர முதல்வர் மற்றும் நகரசபை உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதலை மேற்கொண்டு தீயிட்டு அழித்த சம்பவங்கள் தொடர்பிலேயே 22 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய வர்த்தகர் ஒருவரும் இதில் இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது,
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி 170 பேரிடம் இதுவரையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக வீடுகளை சேதப்படுத்தியமை, தீ வைத்தமை, வாகனங்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட 707 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.