புதுடெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஓய்வுபெறும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஏப்ரல் 13-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார். ஓராண்டு பதவியில் நீடித்த அவர் நேற்று ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஓராண்டில் 4 முறை புதிய வாக்காளர்களை சேர்க்கும் நடைமுறையை வெற்றிகரமாக அமல் செய்துள்ளோம். இதன்படி ஓராண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சீர்திருத்தத்தை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தோம். எனினும் எனது பதவிக் காலத்தில்தான் இதனை அமல்படுத்தியுள்ளோம்.
மத்திய அரசு அனுமதி
இதேபோல வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான விதிகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும். வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் நியாயமான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை தடுக்க முடியும்.
உண்மையான வாக்காளர்
ஆதார் இணைப்பு மூலம் உண்மையான வாக்காளரை எளிதில் அடையாளம் காண முடியும். தேர்தல் நடைபெறும் நாள், வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலின்போது கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் கரோனாவின் ஒமைக்ரான் வைரஸால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தோம்.
பிரச்சாரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தோம். மத்திய, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து கரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த செய்தோம். இதன்படி தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு நடுவே தேர்தலை வெற்றிகரமாக நடத்தினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுஷில் சந்திரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று பதவியேற்கிறார். அவர் வரும் 2025 பிப்ரவரி வரை பதவியில் நீடிப்பார்.