திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஓட்டுநர் தேநீர் அருந்தப்போன நேரத்தில், 38 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் சரக்கு வாகனத்தை கடத்திச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருவுக்கு மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்களுடன் டெம்போ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அருண்குமார் என்பவர் அதை ஓட்டிச் சென்றுள்ளார்.
நள்ளிரவு 2 மணியளவில் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் தேநீர் கடைக்குச் சென்றுள்ளார்.
அதனை மர்ம நபர் ஒருவன் கடத்திச் சென்றான் என்று கூறப்படுகிறது. திடீரென தமது டெம்போ நகர்வதைப் பார்த்த அருண்குமார், பதறி அடித்து ஓடியபோது கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அவர் எழுந்து ஓடுவதற்குள் வேகமாகச் சென்று மறைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.