வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, குறிப்பாக ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி 5 பெண்களால் நீதிமன்றத்தில் மனு அளிப்பட்டது.
இது சம்மந்தமான அந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு செய்ய அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்து இருந்தது.
இந்த ஆய்வு நடத்துவதற்கு மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், கள ஆய்வு நடத்த முடியவில்லை என்று, அஜய் குமார் மிஸ்ரா வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே சமயத்தில் அஜய் குமார் மிஸ்ராவை மாற்றவேண்டும் என்று மசூதி நிர்வாகம் சார்பில் மனு வழங்கப்பட்டிருந்தது
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அஜய் குமார் மிஸ்ராவை மாற்ற முடியாது என்றும், மசூதியை கள ஆய்வு செய்து, வருகின்ற 17 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நேற்று காலை 8.00 மணிக்கு துவங்கிய கள ஆய்வு பனி நண்பகல் 12.00 மணிக்கு முடிவடைந்தது. மேலும், இன்று காலை 8.00 மணிக்கு மீண்டும் இந்த பனி தொடர உள்ளது.
நேற்றைய ஆய்வின்போது வெளியான தகவலின்படி, மசூதியின் அடித்தளத்தில் 30 ஆண்டுகளாக மூடிக்கிடந்த 3 அறைகளும் திறக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மசூதியில் தொடரும் ஆய்வு அறிக்கை வரும் மே 17 -ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த அறைகளில் என்ன இருந்தன என்பது தெரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.