நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ‘பத்தல பத்தல’ பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளை நீக்கக்கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல் எழுதி பாடி ஆடியுள்ள ‘பத்தல பத்தல’ பாடலின் சில வரிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்தப் பாடலில் மத்திய அரசை திருடன் என்றும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை விமர்சித்தும், சாதிய ரீதியாக பிரச்னைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ள வரிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகளுடன் ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரிதா நேற்று அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில், ராஜ்கமல் நிறுவனத்திற்கு அந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நிறுத்த வேண்டுமென்றும், சமந்தப்பட்ட வரிகளை நீக்க வேண்டுமென்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.