இலங்கையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி விடுதலை புலிகள் அமைப்பினால் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
எனினும் ஹிந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தென்னிலங்கை மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
இது தொடர்பான செய்தியின் கீழ் பதிவுகளை வெளியிட்ட சிங்களவர்கள் “ராஜபக்சர்கள் ஏதாவது ஒன்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புலிகள் மீது பழி போடுவதினை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு நாட்டின் பாதுகாப்பு படையினரால் இப்படி ஒரு தகவல் கிடைத்தால் முதலில் அதை விசாரித்து மக்களைத் தூண்டிவிடாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கு தந்திரக்காரர்கள் தான் இருக்கிறார்கள். அந்த தகவலை கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
தற்போது வடக்கிலுள்ள இளைஞர்கள் அன்றாட உணவிற்காக உழைக்க வேண்டியுள்ள நிலையில் உள்ளனர். அவர்கள் படும் துயரத்தை அங்குசென்று பாருங்கள். போலியான தகவல்களை கூறி மீண்டும் அவர்களின் இதயங்களில் இந்த அவல உணர்வுகளை உருவாக்க வேண்டாம் என பலர் பதிவிட்டுள்ளனர்.
ராஜபக்சர்கள் செல்லும் போது தான் புலிகளை எழுப்ப முயற்சிப்பார்கள். ராஜபக்சர்களின் இவ்வாறான நாடகங்களுக்கு நாங்கள் ஏமாந்தது போதும் எனவும் மேலும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
இந்திய புலனாய்வு பிரிவான ரோவினால் ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் நாடகங்களில் இந்த செய்தியும் ஒன்றாகும். முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்தியாவுடன் பல மோசடி ஒப்பந்தங்களை செய்துள்ளனர். இனி அந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாமல் போகும். அதனால் புலி நாடகத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாடு ஆபத்தில் உள்ளதாக கூறி மக்களை முட்டாள்களாக மாற்றுவதை நிறுத்துங்கள் எனவும் மேலும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு போலியான கதைகளை கூறி தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க நினைக்கும் நபர்களை முதலில் வெளியேற்ற வேண்டும் எனவும் பலர் பதிவிட்டுள்ளனர்.
ஈழ நாடு கனவு அல்ல இது ராஜபக்சர்களின் கனவு. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அன்று தேவாலயங்கள் மீது குண்டு வைத்தவர்கள் இந்த முறை என்ன செய்வதற்கு காத்திருக்கின்றார்களோ என பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.