2009ஆம் ஆண்டு, இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். அந்த துர்சம்பவத்தின் நினைவேந்தல் கருத்தரங்கு சென்னை தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இலங்கைக்கு எதிராக தொடுத்த இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த நினைவேந்தல் கருத்தரங்கை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பாரதிய ஜனதா கட்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், மணிப்பூர் மாநிலத்தின் மேனாள் முதல்வர் ராதாபினோடு கொய்ஜம், அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, சமதா கட்சியின் முதன்மைச் செயலாளர் என்.ஏ.கோன், ஜம்மு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஆதித்ய குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பறை இசையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் கருத்தரங்கத்திற்கு வருகைதந்த தலைவர்கள் மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியபோது, “எப்போது ஈழ பிரச்சனை வந்தாலும், அதனை தமிழக பாரதிய ஜனதா கட்சி தான் அதை ஆரம்பித்தது போல் ஒரு வன்மம் நிலவிக்கொண்டிருக்கிறது. அது உடைக்கப்படவேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகை தந்துள்ளேன்.
2008ஆம் ஆண்டு காலகட்டங்களில் நரேந்திர மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால், அப்பிரச்சனைகளை கையாண்ட விதம் வேற மாதிரி இருந்திருக்கும். இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் சிதைக்கப்பட்ட ஒரு யாழ்ப்பாண பகுதியில் கலாச்சார மையத்தை பிரதமர் மோடி கட்டிக்கொடுத்தார். சமீபத்தில் தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து மீட்டு கொண்டுவந்தார் பிரதமர் மோடி.
மோடி வைரம் என்றாலும், அவருடைய நகர்வுகளை இங்கிருக்கும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. அதனால் அதை எடுத்துரைக்கும் சூழல் ஏற்படுகிறது. தற்போது உக்ரைனிற்கும் இலங்கைக்கும் இருக்கும் சூழல் ஒன்று தான். ஆகையால், அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும். இதுவரை இலங்கைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா நிதியுதவி செய்துள்ளது.” என்று கூறுகிறார்.