ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் “சிந்தனை அமர்வு” மாநாட்டில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் பலப்படுத்தவும் பல்வேறு யோசனைகளை முன் வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் “சிந்தனை அமர்வு” கூட்டத்தில் பங்கு பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரு புது நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு இது புது அனுபவம் மற்றும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு என்றும் விஜய் வசந்த் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். கட்சியை பலப்படுத்தி ஒன்றிணைந்து போராடி, காங்கிரஸ் ஆட்சியை 2024ல் அமைப்பதே எமது லட்சியம் என்றும் அவர் கூறி உள்ளார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனுபவம் குறித்து விஜய் வசந்த் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், “உதய்பூர் கூட்டத்தில் எங்கள் கருத்துக்கள் அனைத்தும் கேட்கப்பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அவை எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த கருத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கப்படுகிறது. 2014ல் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கும், பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கும், எழுச்சியை கொண்டு வருவதற்கும் இந்த கூட்டம் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் விஜய் வசந்த்.