LSG v RR: டாஸ் மட்டுமல்ல அத்தனையும் சாம்சனுக்கு சாதகம்தான்; பவர்பிளேயிலேயே போட்டியை முடித்த போல்ட்!

கட்டாயம் வென்றேயாக வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோவிற்கு எதிரான போட்டியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் செட்டே ஆகாது. இந்த சீசனில் ஒன்றிரண்டு முறை மட்டுமே டாஸை வென்றிருக்கிறார். பெரும்பாலும் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்று எதிரணியின் விருப்பப்படியே ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக டாஸ் விழுந்தது. டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.

Butler

பட்லரை எப்படியாவது சீக்கிரம் வீழ்த்திவிட வேண்டும் என்பதே லக்னோவின் எண்ணமாக இருந்திருக்கும். அந்த எண்ணத்தை லக்னோவிற்கு நிறைவேற்றிக் கொடுத்தவர் ஆவேஷ்கான். ஓவர் தி விக்கெட்டில் அவேஷ் கான் படுவேகமாக வீசிய பந்தை ரேம்ப் ஷாட்டாக ஆட முயன்று ஸ்டம்பை பறிகொடுத்து பட்லர் வெளியேறினார்.

பட்லரின் விக்கெட்டிற்கு பிறகு நம்பர் 3-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே இறங்கினார். கடந்த போட்டிகளை போன்று அஷ்வினை மேலே அனுப்பி சுமையை ஏற்றாமல், தானாக முன் வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டு சாம்சனே நம்பர் 3-ல் இறங்கியது நேர்மறையான செயலாக அமைந்தது.

பட்லர் அவுட்டான அதே ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்து சாம்சன் ரன் கணக்கைத் தொடங்கினார். இதன்பிறகு, சாம்சன் ஒரு முனையில் கொஞ்சம் காத்து நிற்க, ஜெய்ஸ்வால் இன்னொரு முனையில் சமீராவின் ஓவரில் பிரித்தெடுத்தார். சிக்ஸரும் பவுண்டரியுமாக இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்திருக்கும். பவர்பிளே முடிந்து ஸ்பின்னர்கள் வரத் தொடங்கியவுடன் சாம்சனும் அடிக்க ஆரம்பித்தார். ரவி பிஷ்னோய் வீசிய ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகளைச் சிதறடித்திருப்பார்.

Jaiswal

ஜெய்ஸ்வால் – சாம்சன் கூட்டணி அரைசதத்தைக் கடந்தது. அதற்கு மேல் அவர்களால் இந்தக் கூட்டணியை நீட்டிக்க முடியவில்லை. ஹோல்டரின் ஓவரில் 32 ரன்களில் சாம்சன் அவுட் ஆகி வெளியேறினார். நம்பர் 4-ல் படிக்கல் இறங்கினார். படிக்கல் அடிப்படையில் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஆனால், இந்த சீசனில் அவருக்கு எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கேற்ற வகையில் தகவமைத்துக் கொண்டு கலக்கி வருகிறார். இங்கே நம்பர் 4-ல் வந்து மிடில் ஓவர்களில் ரன்ரேட் விழாதவாறு அதிரடியில் இறங்கினார்.

ஸ்டாய்னிஸ் மற்றும் சமீரா வீசிய அடுத்தடுத்த 2 ஓவர்களில் 9 பந்துகளில் 24 ரன்களை எடுத்து அசரடித்தார் படிக்கல்.

இந்த இரண்டு ஓவர்களிலும் அடி பலமாக விழுந்ததால் மேட்ச் அப்பை மனதில் கொண்டு இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்காக பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னரான ஆயுஷ் பதோனி அழைக்கப்பட்டார். பதோனி ஒரே ஒரு ஓவரைத்தான் வீசினார். அந்த ஒரே ஓவரில் அணிக்கு தேவையானதை செய்து கொடுத்துவிட்டார். 41 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலின் விக்கெட்டைத் தூக்கினார். 18 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்த படிக்கலின் விக்கெட்டையும் ஸ்பின்னரான ரவி பிஷ்னோயே வீழ்த்தினார். படிக்கல் அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 122-4. ரியான் பராக், அஷ்வின், போல்ட் ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 178 ஆக உயர்ந்தது.

Boult

லக்னோ அணி 179 ரன்களை எடுத்தாக வேண்டும். பவர்பிளேக்குள் அந்த அணி 34 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஓவருக்கு 6 ரன்கள் கூட எடுத்திருக்கவில்லை. ரன்ரேட்டாவது பரவாயில்லை. ஆனால், இழந்த விக்கெட்டுகள் அதுதான் பிரச்னையாக அமைந்தன.

பவர்பிளேக்குள் மட்டும் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. போல்ட் வீசிய ஒரே ஓவரில் டீகாக், பதோனி என இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

டீகாக் ஒரு பவுண்டரிக்கு முயன்று வட்டத்தை கிளியர் செய்ய முடியாமல் பாயின்ட்டில் கேட்ச் ஆகியிருந்தார். பதோனி போல்ட்டின் வழக்கமான பாணியில் கொஞ்சம் உள்பக்கமாக திரும்பி வந்த பந்தில் lbw ஆகினார். பிரசித் கிருஷ்ணா வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் கேப்டன் ராகுல் 19 பந்துகளில் 10 ரன்களை எடுத்த நிலையில் கேட்ச் ஆகியிருந்தார். பவர்பிளேயிலேயே மூன்று முக்கியமான விக்கெட்டுகள் காலி. தீபக் ஹூடா நம்பர் 3-ல் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது பதோனியை ஏன் நம்பர் 3-ல் இறக்கினார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஹூடா இறங்கியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழாமல் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

Hooda – Krunal

பவர்பிளேயில்தான் லக்னோ சொதப்பியது. 7-15 மிடில் ஓவர்களில் ஹூடாவும் க்ரூணால் பாண்டியாவும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து 65 ரன்களைச் சேர்த்தனர். தீபக் ஹூடா அரைசதத்தைக் கடந்தார். ஆனால், இருவராலும் இதுதான் முடிந்தது. அது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மாறவில்லை. தீபக் ஹூடா சஹாலின் பந்தில் ஸ்டம்பிங் ஆக, க்ரூணால் அஷ்வினின் பந்தில் பவுண்டரி லைனில் பட்லர் மற்றும் ரியான் பராக்கால் அட்டகாசமாக கேட்ச் செய்யப்பட்டார்.

ஸ்டாய்னிஸ் கடைசியில் கொஞ்சம் அதிரடியாக முயன்று பார்த்தாலும் அவை தேவைப்படும் ரன்ரேட்டைக் குறைக்காமல் ரன்களைச் சேகரித்துக் கொள்ளவே உதவியது. போட்டியை ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டு அணிகளின் பவர்பிளே பெர்ஃபார்மென்ஸை ஒப்பிட்டோமேயானால் ராஜஸ்தான் அணியை விட 17 ரன்களைக் குறைவாக லக்னோ அணி எடுத்திருந்தது. 2 விக்கெட்டுகளையும் கூடுதலாக இழந்திருந்தது. இந்த பவர்பிளே சொதப்பல்தான் லக்னோவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

RR

இந்தப் போட்டியை ராஜஸ்தான் வென்றதால் பிளேஆஃப்ஸ் ரேஸ் இன்னமும் பரபரப்பாக வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குஜராத்தை தவிர மீதமுள்ள மூன்று இடங்களும் யாருக்கு என்பது இன்னமும் தெரியாமலே இருக்கிறது. உங்கள் கண்ணோட்டத்தின்படி, குஜராத்துடன் எந்த 3 அணிகள் பிளேஆஃப்ஸ் செல்லும்? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.