மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். இன்று இரவு 11.50 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்வில் உச்ச வயது வரம்பில் மாற்றம் கொண்டு வந்தது மட்டுமின்றி, பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை இங்கே காணலாம்.
வயது வரம்பு இல்லை
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான உச்ச வயது வரம்பை அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, நீட் தேர்வில் கலந்துகொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 25 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30ஆகவும் இருந்தது. தற்போது வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், மருத்துவ நுழைவு தேர்வில் இந்தாண்டு போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கேள்வியில் சாய்ஸ்
இம்முறை தேர்வர்களுக்கு கேள்விகளில் சாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 45 கேள்விகளுக்குப் பதிலாக, இந்தாண்டு விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள், அதில் ஏதெனும் 5 கேள்விகள் தவிர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பல பள்ளி வாரியங்கள் பாடத்திட்டங்களை குறைத்தததன் காரணமாக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இது, கடந்தாண்டு முதல் அமலில் உள்ளது.
தேர்வு நேரம் நீட்டிப்பு
NEET UG தேர்வை முடிக்க விண்ணப்பதாரர்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. 180 கேள்விகளின் எண்ணிக்கை அப்படியே இருந்தாலும், கடந்த ஆண்டு 3 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, இம்முறை கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வானது 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.
தேதி மாற்றம்
நீட் தேர்வு ஆண்டுதோறம் மே மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா காரணாக கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நடத்தப்படுகிறது. முன்கூட்டிய தேர்வு, கல்விச் செயல்பாடுகள் தாமதமாகாமல் இருப்பதை உறுதி செய்யும்
அரசு கட்டணத்தில் தனியார் மருத்துவ படிப்பு
தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளின் கட்டணத்தில், 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.
புதிய தேர்வு மையங்கள்
என்டிஏ நீட் தேர்வை 543 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்துகிறது. கடந்தாண்டுடன் 202 நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. கூடுதலாக, இந்தியாவிற்கு வெளியே 14 தேர்வு மையங்களையும் புதிதாக அமைத்துள்ளது.
NEET-UG தேர்வு ஆங்கிலம், இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடைபெறுகிறது.