ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மாதம் ஒன்பிளஸ் நார்டு CE 2 என்ற புதிய ஸ்மார்ட்போனையும் நார்டு பட்ஸ் என்ற பெயரில் TWS இயர்பட்ஸ் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நார்டு என்ற பெயரில் இதுவரை மொபைல் போன்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது ஒன்பிளஸ் நிறுவனம். தற்போது முதல் முறையாக ரூ.2,799-க்கு TWS இயர்பட்ஸ் ஒன்றை நார்டு என்ற பெயரின் கீழ் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த இயர்பட்ஸில் என்னென்ன வசதிகளையெல்லாம் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ்?
ஒன்பிளஸ்ஸின் நார்ட் இயர்பட்ஸ் டிஸைன்
சார்ஜிங் கேஸ் வடிவமைப்பைப் பொறுத்தவரையில் டிஸைனில் புதிய விஷயங்களை எதையும் ஒன்பிளஸ் முயன்று பார்க்கவில்லை. கைக்கு அடக்கமாக இருக்கும் வகையில் சார்ஜிங் கேஸ் இருக்கின்றது. எடை குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸை வெள்ளை மற்றும் கறுப்பு என இரண்டு நிறங்களில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ஒன்பிளஸ். ஒரு இயர்பட்ஸ் 4.82 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் IP55 ரேட்டிங் கொண்டதாக நார்டு இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேட்டரி லைப் மற்றும் சார்ஜிங்
இயர்பட்ஸின் உள்ளே 41 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள சார்ஜிங் கேஸில் 480 mAh பேட்டரி இருக்கிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 30 மணி நேரம் வரை இந்த இயர்பட்ஸை பயன்படுத்தலாம் என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Type – C கேபிள் மூலமாக இதை சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரை இயர்பட்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
சவுண்ட் குவாலிட்டி
டால்பி அட்மாஸ், புளூடூத் 5.2 மற்றும் 12.4 டைட்டானியம் டிரைவர்கள் எனப் பல வசதிகளை இந்த இயர்பட்ஸில் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ். எனவே சவுண்ட் குவாலிட்டியும் நன்றாகவே இருக்கிறது. வீடியோ கேமர்களுக்கு ஏற்ற வகையில் ப்ரோ கேமர் மோட் ஒன்றும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆடியோ தாமதமாகும் நேரம் 94 ms-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து வரும் தேவையற்ற ஒலிகளைத் தடுக்கும் ANC வசதி இதில் கொடுக்கப்படவில்லை. இந்த வசதி பெரும்பாலும் பிரீமியம் செக்மெண்ட் இயர்பட்ஸ்களில் மட்டுமே கிடைக்கிறது. அதற்குப் பதிலாக இதில் AI Noise Reduction வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது தேவையற்ற ஒலிகளைத் தவிர்த்து தெளிவான குரலைக் கொடுக்கும் வகையில் நான்கு மைக்ரோபோன்கள் இதில் இருக்கின்றன. பாடல்களை மாற்ற, மொபைலுக்கு வரும் கால்களை எடுத்துப் பேச என பல்வேறு கன்ட்ரோல்களை இயர்பட்ஸை தொடுவதன் மூலமாகவே மேற்கொள்ளும் வகையிலான வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
SPECS
நிறம்: பிளாக் ஸ்லேட், ஒயிட் மார்பிள்
எடை: சார்ஜிங் கேஸ் 41 கிராம், பட்ஸ் 4.82 கிராம்
12.4 mm டைனமிக் ஆடியோ டிரைவர்
10 நிமிட சார்ஜில் ஐந்து மணி நேரம் பயன்படுத்தும் அளவுக்கான அதிவேக சார்ஜிங்
AI noise cancellation calls
IP55 வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டென்ஸ்
பிளஸ்
* காதுகளில் எந்தத் தொல்லையும் இல்லாமல் சரியாக சீட் ஆகிறது
* சிறப்பான பேட்டரி லைஃப்
மைனஸ்
AI Noise கேன்சலேசன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
வெர்டிக்ட்
அதிகமாக மொபைலில் பேச மாட்டேன், பாடல்கள் மட்டுமே என்பவர்கள் தாராளமாக இந்த இயர்பட்ஸை காதுகளில் ஃபிட் செய்துகொள்ளலாம்.