விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு நடைபெற்று வருகிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சிம்பு கமலுக்கும் தனக்குமான உறவு குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “கமல் 50 நடந்த போது நான் மேடையில் ஏறி பேச முடியவில்லை என வருத்தமா இருந்துச்சு. அது இப்போது நிறைவேறி இருக்கு. அப்பா எப்படி ஆப்-ஸ்கிரின்ல எப்படியோ அது மாதிரி கமல் சார் எனக்கு ஆன்-ஸ்கீரின் குரு. விஸ்வரூபம் படம் பிரச்னையின் போது, எதுக்குமே எழுந்து ஓட மாட்டேன் ஆனால் அன்னிக்கு கமல் சார் கூடவே இருந்தேன். இந்த படம் ட்ரைலர் சூப்பரா இருந்தது. ஒவ்வொருமுறை கமல் சார் படம் வரும் போது என்னை கூப்பிடுவாரு, ஒரு தடவை ‘படம் நல்லா இருக்கு,ஆனா ஓடுமான்னு தெரியல’ எனச் சொன்னேன். இன்னொரு தடவ ‘எனக்கு படம் பிடிக்கல. ஆனால் சூப்பர் ஹிட் ஆகும்னு’ சொன்னேன். கமல் சார் சிரிச்சாரு. இந்த படத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. ட்ரைலர் மட்டும் தான் பார்த்தேன். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும்னு சொல்றேன். லோகேஷ் உடன் நிறைய பேசி இருக்கேன். பழகி இருக்கேன். நிறைய பேசணும் வெளிய சொல்லணும் என இருக்க காலத்துல தன்னுடைய படம் பேசணும்னு வேலை பார்க்கிற ஒருத்தர், லோகேஷ் கனகராஜ். இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட் வச்சுட்டு படம் பண்றது சாதாரண விஷயம் கிடையாது.”
மேலும், “விஜய் சேதுபதி தன்னை எப்போதும் நார்மலா வச்சுட்டு மத்தவங்க கிட்ட இருந்து கத்துக்க முயற்சி செய்பவர். அவர் கூட செக்க சிவந்த வானம் படத்துல நடிச்சு இருக்கேன். மலையாளத்துக்கு பஹத் எப்படியோ அப்படி தமிழுக்கு விஜய் சேதுபதி. பஹத் பாசில் எனக்கு ரொம்ப பிடிக்கும். பர்பார்மன்ஸ் செய்கிற மூன்று பேர் இந்தப் படத்தில் இருக்காங்க. அனிருத்தின் உழைப்பு எனக்கு தெரியும். அனிருத்தின் உழைப்பு தான் ஹிட் ஆகுறதுக்கு காரணம். படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என முடித்தார்.