லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்துள்ள படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம் எனப் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் விஜய் சேதுபதி, சிலம்பரசன் உள்ளிட்ட பலரும் கமலைப் பற்றியும், அவரின் படங்கள் மீதான தங்களின் பார்வை குறித்தும் பேசினர். பா.ரஞ்சித் கமல்ஹாசனும் தானும் இணையவுள்ள படம் குறித்துப் பேசினார். விழாவில் பேசிய கமல்ஹாசன், ” இந்தி ஒழிகனு சொல்ல மாட்டேன்; சைனீஸ் பேசுங்க, குஜராத்தி பேசுங்க , ஆனா தமிழ் வாழ்கனு சொல்வது கடமை. சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. நான் அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். தனியா ஒரு தம்பிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன். கடைசி நேரத்தில் கைகொடுத்தவர்” என நடிகர் சூர்யாவுக்கு நன்றி கூறினார்.