மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால் மதக்கலவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:
நாடு முழுவதும் ஒருவிதமான அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் மதக்கலவரங்களும், வகுப்புக் கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் 7 மாநிலங்களில் பயங்கர கலவரங்கள் நடைபெற்றன. டெல்லியில் அனுமன் ஜெயந்தி விழாவில் வன்முறை உருவானது. வேறொரு மாநிலத்தில் ராம நவமி விழாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த மதக்கலவரங்களை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
மத ரீதியிலான கலவரங்களை அவர் மவுனமாக வேடிக்கை பார்க்கிறார். இதற்கு என்ன காரணம்? இந்தக் கலவரங்கள் குறித்து விரிவான விசாரணை ஏதும் நடத்தப்படுவதில்லை. இதற்கான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறப்பிப்பதில்லை. இந்தக் கலவரங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், எந்தக் கட்சி இதன் மூலம் ஆதாயம் பெறுகிறது என்பதை விசாரணை நடத்தினால் தானே தெரிந்துகொள்ள முடியும்? ஒரு குறிப்பிட்ட கட்சியே இதுபோன்ற கலவரங்களை அரசியல் ஆதாயங்களுக்காக துண்டிவிட்டு வருகிறது. எனவே நாட்டில் நிகழும் மதம் மற்றும் வகுப்புக் கலவரங்கள் குறித்து உரிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இந்த உத்தரவை அவர் பிறப்பிக்கட்டும் இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM