அரசு திட்ட பலன்கள் சாமானிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- அமைச்சர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்

லக்னோ:
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் 
நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
புத்தர் பிறந்த இடமாகக் கருதப்படும் லும்பினியில் உள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சிறப்பு பூஜை நடத்தினார். 
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று இரவு உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோ வந்து இறங்கிய பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து, யோகி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 
உத்தர பிரதேச அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  அப்போது பேசிய பிரதமர்,  உத்தர பிரதேசத்தில் நல்லாட்சி மற்றும் அரசின் செயல்திறனை மேம்படுத்துவது குறித்து  அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். 
அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் அதிகபட்ச நேரத்தை செலவிடுமாறும் பிரதமர் குறிப்பிட்டார். அரசு திட்டங்களின் பலன்கள் சாமானிய மக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு அமைச்சர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். 
அனைத்து அமைச்சர்களும் பொது சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியறுத்தினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பிரதமர் திருப்தி அடைந்ததாகவும், இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரவு உணவு விருந்து அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.