மதுரை: ‘‘மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மேயர் இந்திராணி எச்சரித்துள்ளார்.
முதல் மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்கள் இருக்கையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:
மதுரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விரிவான விதிகள் எதுவும் இல்லை. ஒரு சில வரம்புகளை பின்பற்றி அவரவர் கட்சிக்கு ஏற்றவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கவுன்சிலர்களுக்கு அதுபோலேவே மாநகராட்சியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து இருக்கை ஒதுக்கீடுகளை மாற்றியமைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளில் உள்ள நடைமுறைகள், சட்டபேரவையில் உள்ள இடஒதுக்கீடு ஆகியவற்றை பின்பற்றி தெளிவான குழப்பம் இல்லாத இருக்கை ஒதுக்கீடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளரை அறிக்கையாக தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் பிற கவுன்சிலர்கள் பெயர் ஒட்டப்பட்டிருந்த சீட்டுகளை கிழித்தெறிந்து அவர்கள் இருக்கைகளை கைப்பற்றியது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதுதொடர்பாக மற்ற கவுன்சிலர்கள் புகாரின் அடிப்படையில் அதிமுக கவுன்சிலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.