அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்து ஒன்றில் மழையால் கூரையிலிருந்து தண்ணீர் கொட்டியதால் இருக்கையில் அமர முடியாமல் ஆத்திரமடைந்த பயணிகள் நடுவழியில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரில் இருந்து அல்ட்ரா டீலக்ஸ் என பெயரிடப்பட்ட பழைய அரசு பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7: 50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக பேருந்தில் பல பகுதிகளிலிருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த பயணிகள் மீது சாரலாக அடிக்க தொடங்கிய மழை, அருவி போல கொட்ட தொடங்கியதால் பயணிகள் நனைந்தனர்.
இதில் செய்வதறியாது தவித்த பயணிகள் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் இருக்கைகளில் அமர முடியாத அளவுக்கு ஈரமானதால் வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதாரண பேருந்தில் வேலூருக்கு 70 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அல்ட்ரா டீலக்ஸ் எனக்கூறி ஓட்டை உடைசலான இந்த பேருந்துக்கு ரூபாய் 95 ரூபாய் கட்டணம் பெறப்பட்ட நிலையிலும் வாணியம்பாடி வருவதற்கே 1.30 மணி நேரம் ஆனதாகவும், இதில் எப்போது வேலூருக்கு போவது என்றும், நாங்கள் எப்போது சென்னைக்கு போவது என்றும் பயணிகள் நொந்துபோயினர்.
மழையால் பேருந்தில் இருக்கையில் அமர முடியாமல் நனைந்தபடியே பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நின்ற நிலையில் மாற்று பேருந்து ஏற்பாடு செய்ய கூறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம், பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அல்ட்ரா டீலக்ஸ் எனக் கூறும் நிலையில், பேருந்தில் ஒரு இருக்கைகள் கூட சரியாக இல்லை எனவும், உடைந்து போய் இருக்கைகள் தொங்கும் நிலையில் கயிறு போட்டு கட்டி ஒட்டு வேலை பார்த்து இருப்பதாகவும், உதவாத பேருந்துக்கு அதிக கட்டணம் செலுத்தி தாங்கள் பயண நேரத்தில் அவதிக்குள்ளாகும் குமுறுகின்றனர் பயணிகள்
மாற்று பேருந்துக்காக வாணியம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் பேருந்துகள் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து மாற்று பேருந்து வராததால் நடுவழியில் இரவு நேரத்தில் குழந்தை குட்டிகளுடன் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் இரவு 11 மணிக்கு மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது…..