புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவரான திமுக மாநில அமைப்பாளர் தொகுதியில் சாலைப் பணிக்கான பூமிபூஜைக்கு வந்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார், “அழைப்பிதழும் இல்லை- பேனரில் படமும் இல்லை- மரியாதையும் இல்லை” என்று அதிகாரிகளை குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவின் தொகுதியான வில்லியனூரில் பல சாலைகள் மோசமாக உள்ளது. தற்போது அங்கு புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. வி. மணவெளி தண்டுக்கரை வீதியில் இருந்து ஒதியம்பட்டு வரையிலான சாலை ரூ.1 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், மணவெளி இரயில்வே கேட் முதல் திருக்காஞ்சி வரை உள்ள சாலை ரூ.1 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரம் என ரூ. 2 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் (என்.ஆர்.காங்), குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் (பாஜக), தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்நிகழ்வில் உடல்நலக் குறைவால் லட்சுமி நாராயணன் பங்கேற்கவில்லை. குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார், அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவாவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. திமுகவினர் அதிகளவில் இருந்தனர்.
அப்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியைப் பார்த்து அமைச்சர் சாய் சரவணக்குமார், “ஏன் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனக்கு உண்டான மரியாதை அரசு அதிகாரிகள் கொடுப்பதில்லை” என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், “அமைச்சரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், விழாவில் கலந்துகொள்ள அழைப்பு கொடுங்கள்” என்றார். அதற்கு அதிகாரிகள், “அழைப்பிதழ் அடிக்கவில்லை” என்றனர். அதற்கு அமைச்சர், “பலகோடிக்கு விழா நடக்கும்போது முறையாக அழைப்பிதழ் அடியுங்கள்” என்று கூறி கடுமையாக பேசினார்.
அப்போது அருகில் இருந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, அமைச்சரை சமாதானப்படுத்தினார், இதனை ஏற்க மறுத்த அவர் எதிர்க்கட்சித் தலைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், “பேனரில் எனது படம் இல்லை. திமுகவினர் மட்டும் வந்துள்ளனர். எனது கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. பாஜகவினரை அழைக்காமல் நான் மட்டும் இந்நிகழ்வுக்கு வந்து சென்றால் என்னை என் கட்சியினர் என்ன நினைப்பார்கள்” என தொடர்ந்து கேள்வி எழுப்பினார். தொடர் வாக்குவாதத்துக்கு பிறகு, சமாதானமான அமைச்சர் சாய் சரவணகுமார், சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்துவிட்டு உடன் புறப்பட்டார்.