அ.தி.மு.க.வில் ராஜ்ய சபா சீட் யாருக்கு? 2 இடங்களுக்கு 60 பேர் போட்டி

Rajya sabha MP election 60 members contest to 2 post in ADMK: ராஜ்ய சபாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அ.தி.மு.க சார்பில் 60 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அ.தி.மு.க வேட்பாளர் விவரம் வெளியாக தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை எம்.பி.  இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.கவின் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ்குமார், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வாக உள்ளனர். இந்த தேர்தல் நடைமுறைகள் வருகிற 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்று முதல் 31 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

தமிழகத்தில் உள்ள 6 இடங்களில் 4ல் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், 2 இடங்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் தேர்வாக உள்ளனர். இதில் தி.மு.க சார்பில் 1 இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தி.மு.க. சார்பில்,  கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் 2 பேர் யார் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி உள்ளது. எம்.பி. பதவி கேட்டு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் தினமும் ஏராளமானோர் சந்தித்து பேசி வருகிறார்கள்.

அதேநேரம் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகைச்செல்வன், பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை ஆகியோர் எம்.பி. பதவி வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் நேரடியாக கோரிக்கை விடுத்துஉள்ளனர். இவர்கள் தவிர அடுத்தக்கட்ட தலைவர்கள் பலரும் எம்.பி.பதவிக்கான போட்டியில் உள்ளனர். மொத்தத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் எம்.பி. பதவி கேட்டு கட்சி தலைமையிடம் கடிதம் கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரிடையே கடும் போட்டி இருப்பதாக தெரிகிறது. 

இதையும் படியுங்கள்: கூட்டணிக்கு பா.ஜ.க விடுத்த அழைப்பு: உடைத்துப் பேசிய டி.ஆர் பாலு

அதிமுக அமைப்புச் செயலாளரான செம்மலைக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாததால், தற்போது எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்றும், மாநிலங்களவையில் அதிமுக சார்பில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதால், பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த இடத்தை பிடிக்க முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் வளர்மதி இடையே போட்டி நிலவுகிறது.

2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுவதால் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.