இடைக்கால அரசுக்கு ஆதரவு அளிக்க இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி முடிவு| Dinamalar

கொழும்பு : இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்காக, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான இடைக்கால அரசுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு அளிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா அறிவித்துள்ளது.



அண்டை நாடான இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்றும் நோக்கத்துடன் ரனில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா குற்றஞ்சாட்டியது.

புதிய இடைக்கால அரசுக்கு ஆதரவு அளிக்க, அக்கட்சி தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், நெருக்கடி நிலையை சமாளிக்க இடைக்கால அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு, சமகி ஜன பாலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடிதம் எழுதினார்.இதையடுத்து, சமகி ஜன பாலவேகயா கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:நாடு தற்போது சந்தித்து வரும் நெருக்கடி நிலையில் மக்களை மீட்டெடுப்பதே தற்போதைய அவசியம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பட்ஜெட்



எனவே, அமைச்சரவையில் இடம் பெறாமல், சில நிபந்தனைகளுடன் இடைக்கால அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து உள்ளோம்.சமகி ஜன பாலவேகயா கட்சியில் இருந்து விலகி செல்லும் உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டாலோ, கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கையில் எங்கள் உறுப்பினர்களை ஈடுபடுத்தினாலோ ஆதரவை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:நாட்டை காப்பாற்றுவதே என் குறிக்கோள். மாறாக ஒரு நபரையோ, குடும்பத்தையோ அல்லது குழுவையோ காப்பாற்ற நான் பதவி ஏற்கவில்லை. 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மாற்றாக இடைக்கால நிவாரண பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும். மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும், ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்ய போலீசுக்கு அழுத்தம்!

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் 230 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அதன் பின், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் மெத்தனம் காட்ட துவங்கினர். நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு, அட்டர்னி ஜெனரல் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.