புதுடெல்லி: இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், உலகளவில் கோதுமை விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் போரால் உலகளவில் கோதுமை விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் கோதுமையை நம்பி உள்ளன. இதற்கிடையே, இந்தியாவில் தனியார் வர்த்தகர்கள் மூலம் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு கோதுமை விலை அதிகரித்தது. இதனால், கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை விதித்துள்ளது.இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் நேற்று ஒரு டன் கோதுமை விலை ரூ.34 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. எனவே, ஒன்றிய அரசின் ஏற்றுமதி தடை முடிவுக்கு ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எல்லா நாடுகளும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்றுமதியை நிறுத்தினால் உலகளவில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. சீன நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடாது எனக்கூறும் ஜி 7 நாடுகள், தங்கள் நாட்டு கோதுமை ஏற்றுமதியை ஏன் அதிகரிக்கக்கூடாது? உலகில் அதிக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் 2வது நாடாக இந்தியா இருந்தாலும், சர்வதேச கோதுமை ஏற்றுமதி சந்தையில், இந்தியாவின் பங்கு சிறிய அளவே உள்ளது. முரண்பாடாக, சில வளர்ந்த பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன’ என்று தெரிவித்துள்ளது.