சென்னை: சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று(மே 16) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.01 முதல் மதியம் 12.20 மணி வரை கிரகணம் நிகழும். பவுர்ணமி தினத்தைவிட கூடுதல் ஒளியுடன் ரத்த சிவப்பு நிறத்தில் சந்திரன் ஒளிர்வதால், இதை ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கின்றனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவில் இது முழு கிரகணமாகவும், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் பகுதி கிரகணமாகவும் தெரியும். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தென்படாது.
நாசாவின் இணைய நேரலை (https://www.nasa.gov/nasalive) வழியாக கிரகணத்தை காணலாம். இந்த ஆண்டின் 2-வது சந்திர கிரகணம் நவ.8-ல் நிகழ உள்ளது என வானியல் அறிஞர்கள் கூறினர்.