சென்னை: “அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், பின்னலாடைத் தொழிலுக்கான நூல் விலையேற்றம் இப்படி ஒவ்வொன்றாக ஆரம்பித்து, கடைசியாக சகிக்க முடியாத எதிர்கொள்ள முடியாத புரட்சியாக வந்துவிடும். அதுதான் இலங்கையில் நடக்கிறது, அது இங்கு விரைவில் நடக்கும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் புலவர் கலியபெருமாள் நினைவுநாள் நிகழ்வு இன்று (மே 16) நடைபெற்றது. பின்னர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நூல் விலையேற்றம் காரணமாக பின்னலாடைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு இங்கு நடப்பதற்கு வெகு நாட்கள் இல்லை. சொத்துவரி ஏற்றத்தை எடுத்துக் கொண்டால், 80 விழுக்காடு மக்கள் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர்.
அரசு வரியை உயர்த்தும்போது, வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவார், வரி செலுத்துவதற்காக. 7 ஆயிரம் ரூபாய்க்கு குடியிருந்தால், 14 ஆயிரம் கட்ட வேண்டும். அரசுக்கு வரிப்பெருக்கம் உள்ளது, மக்களுக்கு வருவாய் பெருக்கம் உள்ளதா? அதே சம்பளத்தில் தான் வாழனும். அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், பின்னலாடைத் தொழிலுக்கான நூல் விலையேற்றம் இப்படி ஒவ்வொன்றாக ஆரம்பித்து, கடைசியாக சகிக்க முடியாத எதிர்கொள்ள முடியாத புரட்சியாக வந்துவிடும். அதுதான் இலங்கையில் நடக்கிறது, அது இங்கு விரைவில் நடக்கும்.
தமிழக முதல்வரிடம் கூறுவது, எதற்காக பிரதமருக்கு கடிதம் எழுதுகிறீர்கள், இன்ஸ்டாகிராம், இமெயில் இருக்கு. நீங்கள் செல்போனில் அழைத்து பேசினாலே பேசுவதாக கூறுகின்றீர்கள். எனவே பிரதமரிடம் நேரடியாகவே பேசலாம், 39 எம்பிக்கள் உள்ளனர். ஒரு 10 எம்பிக்களை அனுப்பி பிரதமரிடம் நேரம் கேட்டு, இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன, என்னவென்று பாருங்கள் எனக் கூறவேண்டும் அல்லவா.
அதைவிடுத்து, இன்னும்வந்து போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், கடிதம் போட்டேன் பதில் கடிதம் போட்டார் என்று சொல்வதெல்லாம் ரொம்ப வேடிக்கையாக உள்ளது. ஒரு போர்க்கால நடவடிக்கை, துரிதமான நடவடிக்கை உடனடி தீர்வு காண கடிதம் சரியான வழியாக இருக்காது. இதைத்தான் முதல்வருக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
விலையேற்றம் போன்ற தவிர்க்க முடியாத சூழல் வரும். நாம் ஏற்றுக்கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கை அவ்வாறு உள்ளது. இப்படி ஒவ்வொரு பிரச்சினையும், மொத்தமாக சேரும்போது, ஆட்சியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறும்” என்று கூறினார்.